ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி வாய்ப்பு மூடப்பட்டு விட்டதால், பாஜக கூட்டணியில் இணையத் தயாராகிறார் ஜிதன் ராம் மாஞ்சி.
இது குறித்து ‘தி இந்து’விடம் மாஞ்சியின் கட்சியினர் கூறும்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வது குறித்து இன்னும் ஒருசில நாட்களில் முடிவெடுப்போம். பிஹாரின் 50 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தக் கூட்டணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள இரு தலித் கட்சிகளை விட எங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என நம்புகிறோம். லாலு தனது சொந்த பலத்தை நிதிஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் காட்டுவதற்காக எங்களை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்” என்றனர்.
மக்களவைத் தேர்தலில் பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று, முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது முதல்வராக பதவியேற்ற மாஞ்சி, பிறகு கட்சிக்கு எதிரான நடவடிக்கையால் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். இதையடுத்து இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா எனும் பெயரில் புதிய அரசியல் அமைப்பை தொடங்கிய மாஞ்சி அதை கட்சியாகவும் பதிவு செய்தார். வரும் செப்டம்பர் அக்டோபரில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு அல்லது பாஜகவுடன் கூட்டணி சேர முயன்று வந்தார்.
இந்நிலையில் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக லாலு ஏற்றுக்கொண்டதால், அவர் ஜனதா பரிவார் அணியிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை என்றானது. இதனால் லாலுவுடன் கூட்டணிக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்ததால் பாஜக கூட்டணியில் சேரத் தயாராகி விட்டார் மாஞ்சி.
பாஜக கூட்டணியில் ஏற்கெனவே ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திரா குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சம்தா ஆகிய இரு தலித் கட்சிகள் உள்ளன. இதனால் மூன்றாவது தலித் கட்சியாக இணையவிருக்கும் மாஞ்சியால் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. எனவே மற்ற இரு தலைவர்களை போல மாஞ்சிக்கும் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் பதவி கொடுத்து சரிகட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மாஞ்சி தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மாஞ்சியால் பலம் பெறும் பாஜக
கடந்த மக்களவை தேர்தலில் பிஹாரில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றாலும், அக்கூட்டணி பெற்ற வாக்குகள் 39.6 சதவீதமாக உள்ளது. ஆனால் இதனை எதிர்த்துப் போட்டியிட்ட லாலு, நிதிஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மொத்த வாக்கு 46.28 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் நிதிஷ் கட்சியிலிருந்து மாஞ்சி விலகி தங்களுடன் சேர்வதால் தாங்கள் பலம் பெறுவோம் என பாஜக கூட்டணி நம்புகிறது.
தனித்து விடப்பட்ட பப்பு
இதனிடையே லாலுவின் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜீவ் ரஞ்சன் யாதவ் என்கிற பப்பு யாதவ், மாஞ்சியை போல ‘ஜன் கிராந்தி அதிகார் மோர்ச்சா’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இவர் மாஞ்சியுடன் இணைந்து தனிக் கூட்டணி அமைத்து பிஹார் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். இனி அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் பப்பு யாதவ் தனித்து விடப்பட்டுள்ளார். இதனால் தனது அரசியல் பலத்தை காட்டுவதற்காக ஒருசில தொகுதிகளிலாவது தனித்துப் போட்டியிடத் தயாராகி விட்டார் பப்பு. லாலு கட்சி சார்பில் மதேபுரா தொகுதி எம்.பி.யான இவர், பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றவர்.