ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே டெல்லி சென்றுள்ளார். அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'நிதி ஆயோக்' ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜே டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது ஊழல் வழக்கு உள்ளது. அவர் லண்டனில் வசிக்கிறார். அங்கிருந்து போர்ச்சுக்கல் செல்ல விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோர் உதவியுள்ளனர். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேவின் குடும்பத்தினருக்கும் வர்த்தக ரீதியாக நிறைய தொடர்புகள் இருப்பதாக பல செய்திகள் வெளிவந்தன.
இவ்விவகாரத்தில் வசுந்தரா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தி வந்தாலும், பாஜக வசுந்தராவை வலுவாக ஆதரித்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.