இந்தியா

டெல்லி துணை முதல்வரின் கார் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீஸ் அபராதம்

பிடிஐ

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கார் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை மீறியதால் டிராபிக் போலீஸார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

கடந்த 12-ம் தேதியன்று மாலை நேரத்தில் டெல்லி கஜோரி காஸ் சவுக் பகுதியில் கார் ஒன்று அதீத வேகத்தில் சென்றது. அந்தக் காரின் எண்ணை பதிவு செய்த அப்பகுதி டிராபிக் போலீஸ் அடுத்த சாலை இணைப்பில் இருந்த மற்றொரு போலீஸுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில், காரை போலீஸார் மறித்தனர்.

அப்போதுதான் அது டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கார் என்பது தெரியவந்தது. காருக்குள் மணீஷ் சிசோடியா இருந்தார். வேகமாக கார் ஓட்டியதற்காக கார் ஓட்டுநருக்கு போலீஸார் ரூ.400 அபராதம் விதித்தனர்.

போக்குவரத்து விதியை மீறி துணை முதல்வரின் கார் ஓட்டுநர் காரை இயக்கியதும், அபராதம் விதிக்கப்பட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

SCROLL FOR NEXT