இந்தியா

தெலங்கானாவில் லாரிகள் வேலைநிறுத்தம்: அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து வரிக் குறைப்பு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே ஒரே பர்மிட் முறையை அமல்படுத்துவது உட்பட 11 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரி களுடன் பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது. ஆனால் லாரி உரிமை யாளர்களின் கோரிக்கைகளை ஏற்க தெலங்கானா அரசு மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

இதன் காரணமாக லாரிகள், சரக்கு வாகனங்கள், டிரக்குகள் என சுமார் 3.5 லட்சம் வாகனங்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் மாநிலத்தின் முக்கிய சாலைகளின் ஓரங்களில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. லாரி போக்குவரத்து முடங்கியதால் காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT