இந்தியா

அதானி கையில் மாயக்கயிறு விழிஞ்சமா, குளச்சலா?

செய்திப்பிரிவு

துறைமுகத் திட்டம் கேரளத்தின் விழிஞ்சத்தில் நிறைவேற்றப்படுமா அல்லது தமிழகத்தின் குளச்சலுக்கு மாற்றப்படுமா என்ற பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது கேரள அரசியல் வட்டாரத்தில்.

கேரளத்தின் விழிஞ்சம் துறைமுகத் திட்டம் ரூ.7,000 கோடி மொத்த மதிப்புள்ளது. கேரள கடல்சார் பொருளாதாரத்துக்கு ஒரு உத்வேகத்தைத் தரக் கூடியது இந்தத் திட்டம். கூடவே நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கக் கூடியது. ஆனால், இந்தத் திட்டத் துக்கான ஏலத்தில் பங்கேற்றிருக் கும் ஒரே தொழில் நிறுவனம் அதானி குழுமம்.

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், மோடி அரசு பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்பதற்கான உதாரணங்களில் ஒருவராக காங்கிரஸாலும் இடதுசாரிகளாலும் தேசிய அளவில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருபவர் அதானி. ஆகையால், என்ன முடிவெடுப்பது என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் காங்கிரஸாரும் இடதுசாரிகளும்.

இரு கட்சிகளிலுமே தேசிய அளவில் அதானிக்கு எதிரான மனநிலை இருக்கும் சூழலில், உள்ளூரிலோ “அதானிக்கு ஏலம் போனாலும் பரவாயில்லை; வளர்ச்சிக்கு இத் திட்டம் அவசியம்” என்ற கருத்து இரு கட்சியினரிடமும் நிலவுகிறது.

பொதுவாக, கேரளத்தின் இரு பிரதான கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஒரு நல்ல மரபு உண்டு. இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருபவை; பரம எதிரிகள் என்றாலும், மாநிலத்தின் நலன் எனும் விஷயத்தில் அரசியல் வேறுபாடுகளை இரு தரப்புமே பார்ப்ப தில்லை. காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிடப்பட்ட திட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் தொடங்குவதும் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை காங்கிரஸார் தொடர்வதும் இங்கு சகஜம்.

இத்தகைய பின்னணியில், அதானி தொழில் குழுமத் தலைவரை முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனும் தன் ஆட்சிக் காலத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்; இப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆக, இரு கட்சிகளுக்குமே இத் திட்டத்தைக் கொண்டுவருவதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால், அதானிக்குத் திட்டம் செல்வதால் ஏற்படும் அரசியல் விமர்சனங்களுக்குச் சங்கடப்பட்டு கையைப் பிசைகின்றன. “அதானியை முதல்வர் உம்மன் சாண்டி சந்தித்த போது என்ன பேசினார்; ஒரே மர்மமாக இருக்கிறது” என்று இடதுசாரிகளும் “முன்பு உங்களவர் அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது சந்தித்தாரே அப்போது அவர் என்ன பேசினார்” என்று காங்கிரஸாரும் ஒருவர் மீது மற்றொருவர் பழி போட்டு அரசியல் செய்யக் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “விழிஞ்சம் துறைமுகத் திட்டம் தொடர்பாகக் கேரள அரசு உடனடியாக முடிவெடுக்காவிட்டால், குளச்சலுக்கு இத்திட்டம் செல்லும்” என்று அறிவித்தார். கேரள அரசியல்வாதிகளை சீக்கிரம் வழிக்குக் கொண்டுவர அதானி மேற்கொண்ட காய் நகர்த்தல் இது என்று சந்தேகிக்கிறார்கள் கேரள அரசியல் விமர்சகர்கள்.

இந்தக் காய் நகர்த்தல் அவர்கள் எதிர்பார்த்தபடி கேரள அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது. திட்டம் எங்கே கேரளத்தைக் கைவிட்டு தமிழகத்துக்குச் சென்று விடுமோ என்று பேச ஆரம்பித்திருக்கின்றனர் கேரள அரசியல்வாதிகள். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ஒரு படி மேலே போய், “திருவனந்தபுரம் மக்கள் 25 ஆண்டுகளாகக் காத்திருக்கும் திட்டம் இது. இந்தத் திட்டம் கேரளத்தைவிட்டு வேறு மாநிலத்துக்குச் சென்றால் அது திருவனந்தபுரத்துக்கு இழைக்கப்படுகிற அநீதியாக இருக்கும். விழிஞ்சம் கடல்துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக கேரளத்தின் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே குளச்சலில் இத்திட்டத்தை வரவேற்கும் சமிக்ஞைகளைத் தமிழகத் தரப்பு அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் மாநிலங்கள், கட்சிகள், சித்தாந்தங்கள் எல்லா எல்லைகளையும் தாண்டியும் காரியங்களைச் சாதிக்கின்றன தொழில் நிறுவனங்கள்!

SCROLL FOR NEXT