இந்தியா

கிரீன்பீஸ் இந்தியாவின் 2 உயர் அதிகாரிகள் திடீர் ராஜினாமா

பிடிஐ

கிரீன்பீஸ் இந்தியா தொண்டு அமைப்பின் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கை கையாண்டது பற்றி விவகாரத்தில் அதன் இரு உயரதிகாரிகள் ராஜிநாமா செய்துள்ளனர்.

கிரீன்பீஸ் இந்தியாவின் செயல் இயக்குநர் சமித் ஐச், திட்ட இயக்குநர் திவ்யா ரகுநாதன் ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்துள்ளவர்கள்.

இது தொடர்பாக அரசு சாரா தொண்டு நிறுவனமான கிரீன்பூஸ் இந்தியா அமைப்பின் இணையதளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இரு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை, நிறுவன அளவில் மறுஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து செயல் இயக்குநர் சமித் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இது தவிர திட்ட இயக்குநர் திவ்யா ரகுநாதனும் பதவியில் இருந்து விலகியுள்ளார். இவர்களுக்கு பதிலாக இடைக்கால இயக்குநர்களாக வினுடா கோபால், சஞ்சீவ் கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமித் ஐச் தனது பதவியில் கடந்த 11 ஆண்டுகாலம் சிறப்பாக செயல்பட்டதாகவும் கிரீன்பீஸ் அமைப்பு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

கிரீன்பீஸ் இந்தியாவில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இரு ஆண் ஊழியர்கள் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் இணையதளத்தில் வெளியான கட்டுரை மீண்டும் பிரச்சினையை கிளப்பியது.

வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் விவகாரத் தில் கிரீன்பீஸ் அமைப்பின் உரிமத்தை மத்திய அரசு சமீபத்தில் 6 மாதம் ரத்து செய்தது. அதன் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT