இந்தியா

போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: மேலும் ஓர் ஆம் ஆத்மி எம்எல்ஏ சிக்கினார் - விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

டெல்லி சட்ட அமைச்சரைத் தொடர்ந்து, போலி கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளார் மேலும் ஓர் ஆம் ஆத்மி எம்எல்ஏ. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான கரன் சிங் தன்வர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “டெல்லி கன்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏ சுரேந்தர் சிங் சிக்கிம் பல்கலைக்கழகத்தில் 2012-ல் பி.ஏ. பட்டம் பெற்றிருப்பதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சிக்கிம் பல்கலைக்கழகத்தில் விவரம் கோரப்பட்டது.

அதற்கு, எங்களது ஆவணங் களின்படி சுரேந்தர் சிங் என்ற பெயரில் யாரும் படிக்கவில்லை என அந்தப் பல்கலைக்கழகம் பதில் அளித்துள்ளது. இதன்மூலம் அவர் தன்னைப் பற்றி பொய்யான தகவலைக் கூறி வாக்காளர்களை ஏமாற்றி உள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனவே, அவரது வெற்றியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹிமா கோலி, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சுரேந்தர் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தார்.

இதுகுறித்து சுரேந்தர் சிங் கூறும் போது, “அரசியல் உள்நோக்கத் துடன் என் மீது வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. பட்டம் பயின்றதற்கு என்னிடம் போதுமான ஆதாரம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கை எதிர்கொள்வேன்” என்றார்.

இதுபோல பாஜகவைச் சேர்ந்த நந்த கிஷோர் கர்க் என்பவர் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில், தோமர் போலியான கல்வி சான்றிதழை வேட்பு மனுவுடன் இணைத்துள்ளதாகவும் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் தோமரை கைது செய்தனர். இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

SCROLL FOR NEXT