கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து டெல்லியில் கலவரம் ஏற்பட்டது. இதில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக டெல்லி குருத்வாரா புல்பங்காஷ் என்ற பகுதியில் பாதல் சிங், தாக்குர் சிங், குர்சரண் சிங் ஆகிய 3 பேர் 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி கொல்லப்பட்டனர். சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் உட்பட பலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
‘‘இந்த வழக்கில் 3 பேர் கொலையில் டைட்லருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே, வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’’ என்று கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து, மறு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மீண்டும் விசாரணை நடந்தது. சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில், அபிஷேக் வர்மா என்ற வர்த்தகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தது. அதன்பின் 3 பேர் கொலையில் டைட்லருக்கு தொடர்பில்லை. எனவே வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று கடந்த 2009 ஏப்ரல் 2-ம் தேதி மீண்டும் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை கடந்த 2010 ஏப்ரல் 27-ம் தேதி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதன் மீது டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட் எஸ்.பி.எஸ்.லாலர் முன்னிலையில் விவாதம் நடைபெற்று வருகிறது. சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா ஆஜரானார்.
அவர் வாதிடுகையில், ‘‘கலவர வழக்கில் முக்கிய சாட்சியான சுரீந்தர் குமார் கிரந்தி என்பவரை பிறழ்சாட்சியாக்க டைட்லர் முயற்சித்ததாக சிறையில் உள்ள அபிஷேக் வர்மா,சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டைட்லருக்கு எதிரான புகார்களை மறுத்து கூறுவதற்காக சுரீந்தருக்கு (தற்போது இவர் இறந்துவிட்டார்) கணிசமான தொகை கொடுப்பதாகவும், அந்த பணத்தில் அவர் கனடாவில் குடியேறலாம் என்றும் பேரம் பேசினர் என்று வர்மா தெரிவித்துள்ளார்’’ என்றார்.
இதையடுத்து, டைட்லர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பதில் அளிக்கும்படி சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டது. அதன்படி, இந்த வழக்கு மீண்டும் டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘டைட்லர் மீது 193 (பொய் சாட்சிக்கான தண்டனை), 195ஏ (பொய் சாட்சி அளிக்க மிரட்டுதல்) மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் டைட்லர் மீது புதிதாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவரின் மனுவை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் பி.எஸ்.லாலர், வழக்கு விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அப்போது, டைட்லருக்கு எதிரான வழக்கை முடித்து கொள்ளும் சிபிஐயின் 3-வது அறிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் புதிய மனு தாக்கல் செய்யலாம்’’ என்று உத்தரவிட்டார்.