டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவில் பிஹார் மாநில போலீஸாரை நியமிக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இந்த முடிவை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கடுமையாக கண்டித்துள்ளார்.
டெல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் அனில் குமார் என்பவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ‘டெல்லி யில் பணியாற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களைக் கைது செய் யும் அதிகாரம் ஊழல் தடுப்புப் பிரி வுக்கு உள்ளது’ என்று தீர்ப்பளித் தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட் டுள்ளது.
முன்னதாக டெல்லி துணை நிலை ஆளுநரின் அதிகாரத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த 21-ம் தேதி மத்திய அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அதில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் நியமனம், காவல் துறை, நிலம் சார்ந்த விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக் உள்ளிட்ட பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் கடிதம் அனுப்பினார். அதில் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக உள்ளது, இந்தப் போராட்டத்தில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவில் போலீஸார் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் திறமையான அதிகாரிகளை அனுப்பி உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
டெல்லியில் பிஹார் போலீஸார்
இதை ஏற்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்களை டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு பணிக்கு அனுப்பிவைத்துள்ளார். அவர்களை முறைப்படி பணியில் நியமிக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
இதற்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில், டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது, ஆளுநரின் அனுமதியின்றி யாரையும் பணியில் நியமிக்க முடியாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆம் ஆத்மி அரசு குற்றச்சாட்டு
இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறிய போது, டெல்லி அரசு நிர்வாகத்தை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி வருகிறது. துணைநிலை ஆளுநரின் மூலம் சர்வாதிகாரம் கட்டவிழ்க்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் அசுதோஷ் கூறியபோது, டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவை பலப்படுத் துவது சிலருக்கு (மத்திய அரசு) பிடிக்கவில்லை. அதனால் துணை நிலை ஆளுநர் மூலம் அதை தடுக்க முயற்சிக்கின்றனர் என்றார்.
ஆளுநருக்கு ஆதரவு
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறிய போது, டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. அந்தப் பிரிவில் ஆளுநரால் மட்டுமே போலீஸாரை நியமனம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.