‘‘ஸ்மார்ட் சிட்டி மற்றும் நகரங்களை புதுப்பிக்கும் 2 திட்டங்களும் விரைவில் தொடங்கும்’’ என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, எல்லா வசதிகளுடனும் கூடிய 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும். மேலும், நாட்டில் உள்ள 500 நகரங்களை அதிநவீன தொழில்நுட்பங்கள், வசதிகள் கொண்டவையாக புதுப்பிக்கப்படும் என்று அறிவித்தது. இதுதொடர்பான கருத்தரங்கு மும்பையில் நேற்று நடந்தது. இதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
இந்தியாவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் மற்றும் நகரங்களைப் புதுப்பிக்கும் திட்டம் (அடல் மிஷன் பார் ரிஜுவெனேஷன் அண்ட் டிரான்ஸ்பார்மேஷன்) ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பாஜக அரசின் எண்ணம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரைவில் தொடங்கும். அதேநேரத்தில் 500 நகரங்களை புதுப்பிக்கும் பணிகளும் இந்த மாதத்திலேயே தொடங்கி விடும்.
100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடி, 500 நகரங்களைப் புதுப்பிக்கும் திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி என சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயில் இந்த 2 திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முதலீடு செய்ய ஜப்பானைச் சேர்ந்த சர்வதேச ஏஜென்சி, உலக வங்கி தவிர வேறு 14 நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.