காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில், தீவிரவாத செயல்களில் இருந்து விடுபட்டு திருந்தி வாழும் நபர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களில் இருந்து விடுபட்டு திருந்தி வாழும் தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லும் சம்பவம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் இவ்வாறாக 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது.
இந்தச் சம்பவங்களுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இது குறித்து போலீஸ் தரப்பில், "எய்ஜாஸ் அகமது ரேஷி. முன்னாள் தீவிரவாதியான இவர் சோபூர் மாவட்டம் முண்ட்ஜி பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இவரது வீட்டுக்கு வந்த சில மர்ம நபர்கள் இவரை வீட்டுக்கு வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர். கடந்த ஒரு வாரத்தில் இதே பாணியில் 4 கொலைகள் நடந்துள்ளன. இவற்றிற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக நேற்று, சோபூரில் கறிக்கோழிக் கடை வைத்திருந்த முன்னாள் தீவிரவாதி மெஹ்ராக் உத் தின் கொல்லப்பட்டார்.
கடந்த செவ்வாய் கிழமையன்று தெஹ்ரிக் இ ஹூரியத் அமைப்பில் இருந்து விடுபட்டு அரசுப் பணியில் இருந்தவர் கொல்லப்பட்டார். இதேபோல், வெள்ளிக்கிழமை இரவு மற்றொரு கடை உரிமையாளரும் கொல்லப்பட்டார்" எனத் தெரிவித்துள்ளது.