கடந்த 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது விசாரணைக் கைதியாக சிறையில் இருப்பவர் முகம்மது தவுசா. இவர் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய சகா என கருதப்படுகிறது. தவுசா, மும்பை ஆர்த்தூர் சாலை சிறையில் இருந்தபடி பாலிவுட் பட உலகில் ஆதிக்கம் செலுத்துவதாகப் புகார் உள்ளது.
இந்நிலையில் முகம்மது தவுசா அண்மையில் மும்பை நகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். இவர் நீதிமன்றம் அழைத்துவரப்படும் வழியில், துபாயில் உள்ள நகைக்கடை ஒன்றின் விளம்பரத் துக்காக மும்பையின் மாடல் அழகிகளை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக சுமார் 8 அழகிகள் ஏதோ ஒரு காரணம் கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும், இவர்களில் மூவரை தவுசா தேர்வு செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த சில தினங்களுக்கு பிறகு, அந்த அழகிகளிடம் தவுசாவின் ஆட்களில் இருவர் போலீஸ் சீருடையில் நடத்திய கொள்ளையால் இந்த விஷயம் வெளியில் தெரிந்துள்ளது.
தவுசாவால் தேர்வு செய்யப்பட்டவர்களில் 19 வயது மாடல் அழகி ஒருவரை மும்பையின் மஹிம் பகுதியின் அடுக்கு மாடி வீடு ஒன்றுக்கு தவுசாவின் கூட்டாளியாகக் கருதப்படும் 27 வயது கயாமுதீன் சையத் கடந்த மே 8-ம் தேதி வரவழைத்தார்.
அங்கு துபாய் பணிக்காக ரூ.5 லட்சம் பேசி அதற்கு முன்தொகையாக 1 லட்சத்தை அந்த அழகியிடம் அளித்துள்ளார். இதைப் பெற்றுக்கொண்டு அந்தப் பெண் வாடகை காரில் செல்லும்போது, திரைப்பட பாணியில் போக்குவரத்து சிக்னல் ஒன்றில் தடுக்கப்பட்டார். அங்கு போலீஸார் போல் சீருடை அணிந்த இருவர் அப் பெண்ணுடன் காரில் ஏறி அமர்ந்துள்ளனர். தங்களை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், அப்பெண் எதற்காக, யாரிடம், எவ்வளவு முன்பணம் பெற்றார் என்று கூறி அவரை மிரட்டியுள்ளனர். பிறகு கைது செய்யப்போவதாக கூறியதைத் தொடர்ந்து நடந்த பேரத்தில், அப்பெண்ணிடம் ரூ.1 லட்சம் பணம் மற்றும் கைப்பேசியை பறித்தனர். கைப்பேசியை மும்பை அண்டாப் ஹில் காவல்நிலையத்தில் மறுநாள் பெற்றுக்கொள்ளும்படி கூறிச் சென்றுவிட்டனர்.
சில தினங்களுக்குப் பின் அப்பெண் அண்டாப் ஹில் காவல் நிலையம் சென்று கைப்பேசியை கேட்டபோது, நடந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய மும்பை சிவாஜி பார்க் காவல் நிலைய அதிகாரி ஒருவர் `தி இந்து’விடம் கூறும்போது, “கடந்த 15-ம் தேதி தவுசாவின் கூட்டாளிகளான கயாமுதீன் சையத், போலீஸார் போல் அழகியிடம் பணம் பறித்த பெரோஸ் முஸ்தபா கான், முகம்மது அன்வர் அன்சாரி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஆள் கடத்தல், மோசடி ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட தவுசா, அழகிகளை தேர்வு செய்தது எப்படி என தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது” என்றார்.