மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து ஓர் ஆண்டே ஆகியுள்ள நிலையில், அண்மைகாலமாக அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கி வருவதற்கான காரணங்களை கண்டறியுமாறு பாஜகவுக்கு சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
லலித் மோடி விசா பெற உதவிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அகியோரும், மகாராஷ்டிராவில் கல்வி அமைச்சர் பங்கஜா முண்டே ஊழல் புகாரிலும், கல்விச் சான்றிதழ் சர்ச்சையில் அமைச்சர் ஸ்மிருதி இராணியும் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் இவ்வாறாக சர்ச்சைகளில் சிக்கியிருப்பது குறித்து பாஜக அலசி ஆராய வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.
சிவ சேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில், "மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் பாஜக சர்ச்சையில் சிக்கியுள்ளது. மத்தியில் நிலவும் பிரச்சினையை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சமாளித்துக் கொள்வர். ஆனால், மகாராஷ்டிராவில் எழுந்துள்ள சர்ச்சைகளை முதல்வர் பட்னாவிஸ் எதிர்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் எழுகின்றன. இவற்றை பட்னாவிஸ் எதிர்கொள்வதே பெரும் சவாலாகும்.
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் இவ்வாறாக சர்ச்சைகளில் சிக்கியிருப்பது குறித்து பாஜக அலசி ஆராய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.