இந்தியா

ராணுவ நிகழ்ச்சியில் தலைகீழாக பறந்த தேசிய கொடி

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூத்த ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தேசியக் கொடி தலைகீழாக இருந்தது ராணுவத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மணீஷ் மேத்தா நேற்று கூறியதாவது:

ரோமியோ படையின் கீழ் செயல்பட்டு வரும் பிராந்திய ராணுவப் படை சார்பில் கடந்த 22-ம் தேதி ரஜவுரி மாவட்டம் பல்மா என்ற இடத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பரிசு பெற்ற மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போது, கவனக்குறைவால் தேசியக் கொடி தலைகீழாக திரும்பிக்கொண்டது. இந்தத் தவறுக்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரோமியோ படையின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் பிரிவு மேஜர் ஜெனரல் ஏ.கே.சன்யலின் மனைவி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT