மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) கே.வி.சவுத்ரியும் தலைமை தகவல் ஆணையராக (சிஐசி) விஜய் சர்மாவும் நேற்று நியமிக்கப் பட்டனர்.
இதுபோல் இந்தியன் வங்கி யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டி.எம்.பாசின், தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்பு தல் அளித்துள்ளார்.
இதுவரை ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே சிவிசி பதவிக்கு நியமிக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக ஐஆர்எஸ் அதிகாரியான சவுத்ரி சிவிசியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான சவுத்ரி, மத்திய நேரடி வரிகள் வாரியத் தின் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெற்றார். இவர் இப்போது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்டுள்ள கருப்புப் பணம் மீட்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) ஆலோசகராக இருந்து வருகிறார்.
சுற்றுச் சூழல் துறை முன்னாள் செயலாளரான விஜய் சர்மா, கடந்த 2012-ம் ஆண்டு முதல் மத்திய தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருப்பார். அதேநேரம், சவுத்ரியும், பாசினும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) முன்னாள் இயக்குநர் ராஜீவ் தற்காலிக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ளார். இவர் புதிய சிவிசியாக நியமிக்கப்பட் டுள்ள சவுத்ரியைவிட 3 ஆண்டுகள் பணியில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவிசியாக இருந்த பிரதீப் குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஓய்வு பெற்றார். சிஐசியாக இருந்த ராஜீவ் மாத்தூ ரின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி முடிந்தது குறிப்பிடத்தக்கது.