இந்தியா

கணவர் பிரதமராவது மகிழ்ச்சி: நரேந்திர மோடி மனைவி யசோதா பென் பேட்டி

செய்திப்பிரிவு

எனது கணவர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவரது மனைவி யசோதா பென் தெரிவித்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனது வாழ்நாளில் நான் இப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தொடர்ந்து முன்னேற வேண்டும், வாழ்வில் பல்வேறு வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

முதல்முறையாக அவர் என்னை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டுள்ளார். மிக நீண்ட நாள்களுக்குப் பின்னரும் அவர் என்னை மறக்கவில்லை. நினைவில் வைத்திருக்கிறார்.

வடோதராவில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது என்னை அவரது மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய தேர்தல்களில் அவர் எனது பெயரை குறிப்பிடவில்லை.

எனினும் அவர் எங்களது திருமணத்தை ஒருபோதும் மறுத்தது இல்லை. அவர் என்னைக் குறித்து ஒருபோதும் அவதூறாகப் பேசியது இல்லை. நாங்கள் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. நாட்டுக்குச் சேவை செய்வதற்காக அவர் குடும்பத்தைப் பிரிந்து சென்றார்.

அந்தவகையில்தான் நாங்கள் பிரிந்தோம். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவரது மனைவி என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் செல்வீர்களா என்று கேட்டபோது, என்னை அழைத்தால் நிச்சயம் செல்வேன் என்று பதிலளித்தார்.

SCROLL FOR NEXT