தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக கர்நாடகா அறிவித்துள்ளது. அதனை வரவேற்றுள்ள அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, இவ்வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சி செய்வேன் எனத் தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆச்சார்யா கூறியதாவது: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்துள்ள கர்நாடக அரசின் முடிவை வரவேற்கிறேன்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நிறைய குளறுபடிகள் இருப்பதை முன்வைத்து பரிந்துரை செய்தேன். எனது கோரிக்கையை ஏற்று, எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு மகிழ்ச்சியை அளிக் கிறது.
என்னுடைய உடலும், மனமும் ஒத்துழைக்கும் வரை இவ்வழக்கில் பணியாற்றுவேன். எத்தகைய அழுத்தம் வந்தாலும் உச்ச நீதிமன்றமும், கர்நாடக அரசும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிப்பேன்.
மேல்முறையீட்டு மனு தாக்க லுக்கு தேவையான ஆவணங் களை நீதிமன்றத்தில் இருந்து பெற வேண்டும். அதன் பிறகே மேல்முறையீடு செய்யப்படும்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு 3 மாத காலம் அவகாசம் அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, இம்முறை அது போன்ற உத்தரவை பிறப்பிப்பாரா என்பது பெரும் கேள்விக்குறி. எந்த வழக்கையும் முன் முடிவோடு அணுகக் கூடாது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணைப் போக்கை கணிக்க முடியாது.
கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்டோர் வாங்கிய கடன்களை கணக்கிட்டதில் பிழை ஏற்பட்டுள்ளது. இதனை வெறுமனே கூட்டல் பிழை என கருத முடியாது.
அதை சரி செய்தாலே ஜெயலலிதா உள்ளிட்ட நால் வரையும் குற்றவாளிகளாகத்தான் அறிவிக்க வேண்டும். ஆனால், அதை பிரதானமாக வைத்து வாதிட மாட்டேன். இதை விடவும் பல முக்கிய தவறுகள், சட்ட ரீதியான முரண்பாடுகள், தவறான முன் உதாரணங்கள் பல இருக்கின்றன. அதை அடிப்படையாக வைத்துத்தான் வாதிடுவேன். இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருப்பதால் உச்ச நீதிமன்றம்தான் இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும்.
மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த மனுவுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடைக்கோரும் சிறப்பு உரிமையும் அதிகாரமும் இருக்கிறது.
எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை வாங்க முதலில் ஆச்சார்யா முயற்சிக்கிறார் என ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அமலுக்கு வந்துவிடும். அப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் பதவிக்கு பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
3-ம் தரப்பாக திமுக
கர்நாடக அரசின் முடிவு தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்களின் ஒருவரான பாலாஜி சிங் கூறும்போது, “கர்நாடகா மேல்முறையீடு செய்தாலும் நாங்களும் வழக்கம் போல மூன்றாம் தரப்பாக மேல்முறையீடு செய்வோம். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே அறிவித்து விட்டார்.
எங்களது தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சிப்போம். உச்ச நீதிமன்றம் தடை வழங்கினால் ஜெயலலிதா குற்றவாளியாகவே கருதப்படுவார். எனவே மீண்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உயர் நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளதால், இந்த வழக்கிலும் தடை கிடைக்கும் என முழுமையாக நம்புகிறோம்''என்றார்.