இந்தியா

ராஜஸ்தானில் ரூ.5 திருடிய மகனுக்கு தீ வைத்த தாய்

செய்திப்பிரிவு

தின்பண்டம் வாங்குவதற்கு ரூ.5 திருடிய மகன் மீது தாய் தீவைத்த கொடூர சம்பவம், ராஜஸ்தான் மாநிலம், பிகானர் நகரில் நடந்துள்ளது.

சாகில் குமார் என்ற இந்த 6 வயது சிறுவன், 40 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

தன் மீது தாய் தீவைத்தது குறித்து அவன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளான். இதன்படி போலீஸ் தரப்பில் கூறியதாவது:

பிகானர் நகரின் ராம்புரா பஸ்தி பகுதியைச் சேர்ந்த இச்சிறுவன், கடந்த திங்கள்கிழமை வீட்டில் ரூ.5 எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு தின்பண்டம் வாங்கச் சென்றுள்ளான். இதை பார்த்துவிட்ட அவனது தாய், ஓடிவந்து பணத்தை பறித்துக்கொண்டார். பிறகு சிறுவனை வீட்டுக்குள் இழுத்துவந்து அவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவனது அலறல் கேட்டு அவனது அத்தையும், பாட்டியும் ஓடிவந்து அவன் மீது தண்ணீரை கொட்டி தீயை அணைத்துள்ளனர்.

சிறுவனுக்கு கைகள், அடிவயிறு, மார்பு, தொடைகள் பிறப்பு உறுப்பு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சிறுவனின் தாய் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள் ளோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT