இந்தியா

புல்லட் ரயிலில் ஏழைகள் ஏற முடியாது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தாக்கு

பிடிஐ

புல்லட் ரயில் குறித்து பிரதமர் மோடி அடிக்கடி பேசுகிறார். அந்த ரயிலை ஏழைகள் வேடிக்கை பார்க்கத்தான் முடியும், ஏற முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், பழங்குடியின மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பொருளாதார வளர்ச்சிக்கு நிலங்கள் தேவை என்று மத்திய அரசு கூறுகிறது. அதற்காக விவசாயிகள், ஏழைகளிடம் இருந்து நிலங்களைப் பறிக்கிறது. அதற்கு பிரதிபலனாக அவர்களுக்கு வேலை வழங்குகிறோம் என்று அரசு கூறுகிறது. நிலத்தைப் பறிகொடுத்த பலரை சந்தித்துப் பேசியுள்ளேன். அவர்களில் யாருக்குமே இதுவரை வேலை கிடைக்கவில்லை.

காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை அரசு விரட்டுகிறது. அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. அதன் பயன் தொழிலதிபர்களுக்கு கிடைக்கிறது. பழங்குடிகள் எப்போதும் போல பரிதாப நிலையில் உள்ளனர். ஏழைகள், பழங்குடிகள் பயன் அடை யாத வளர்ச்சி யாருக்குத் தேவை?

பொதுவாக தேர்தலின்போதுதான் நரேந்திர மோடி மக்களை தேடி வருவார். அந்த நேரத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்பார். அப்படி சொல்லி ஆட்சியைப் பிடிப்பார். பின்னர் மக்களை மறந்துவிடுவார்.

ஏழைகள் மீது அவருக்கு அக்கறை இல்லை. 15 லட்சம் ரூபாய் கோட், சூட் அணிந்து கொண்டு ஆஸ்திரேலியா வுக்கும் அமெரிக்காவுக்கும் சுற்றுலா செல்வதுதான் அவருக்கு அலாதி பிரியம்.

நாட்டில் புல்லட் ரயில் இயக்கப்படும் என மோடி தம்பட்டம் அடிக்கிறார். புல்லட் ரயில் 400 கி.மீட்டர் வேகத்தில் செல்லுமாம். அந்த ரயிலை ஏழைகள் வேடிக்கைதான் பார்க்க முடியும், ஏற முடியாது. மோடி போன்று கோட், சூட் அணிந்தவர்கள் மட்டுமே புல்லட் ரயிலில் பயணம் செய்ய முடியும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் விவசாயிகள், பாமர மக்களுக்கு உதவும் வகையில் இல்லை. மாறாக தொழிலதிபர்கள் செழித்து கொழிக்க உதவுகிறது. விவசாயிகள், ஏழைகளை சுரண்டும் பணியை மத்தியில் மோடியும் மாநிலத்தில் ரமண் சிங்கும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT