இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் எரிக்கப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் நகரில் பத்திரிகை யாளர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் மனு மீது மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாஜகான்பூரில் இம்மாதம் 1-ம் தேதி ஜாகேந்திரா என்ற பத்திரிகையாளர் அவரது வீட்டில் போலீஸ் மற்றும் குண்டர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்டார். கடந்த 8-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆளும் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சர் ராம்மூர்த்தி சிங் வர்மாவின் சட்டவிரோத சுரங்க செயல்பாடுகள் மற்றும் நில ஆக்கிரமிப்புகள் குறித்து பேஸ்புக்கில் ஜாகேந்திரா தொடர்ந்து எழுதிவந்தார். இந்நிலையில் அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே ஜாகேந்திரா கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அமைச்சர் மீது வழக்கு பதிவு

இது தொடர்பாக ஜாகேந்திராவின் மகன் ராகவேந்திரா அளித்த புகாரின் பேரில் அமைச்சர் ராம்மூர்த்தி சிங் மற்றும் 5 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

“வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அமைச்சர் மற்றும் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மாநில அரசின் விசாரணை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், அருண் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசு, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ரூ.30 லட்சம் நிவாரணம்

இதனிடையே எரித்துக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜாகேந்திராவின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடும் அவரது குடும்பத்தில் இருவருக்கு வேலையும் வழங்க உ.பி. அரசு முன்வந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஜாகேந்திராவின் குடும்பத்தினரை முதல்வர் அகிலேஷ் சிங் யாதவை நேற்று அழைத்துப் பேசினார். அப்போது மாநில அரசு இந்த உறுதியை அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட ஜாகேந்திராவின் குடும்பத்தினர் தங்கள் போராட் டத்தை கைவிட முடிவு செய் துள்ளனர்.

வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகிலேஷ் ஏற்கவில்லை. ஜாகேந்திரா கொலை வழக்கில் ராம்மூர்த்தி சிங் குற்றவாளி என உறுதியாகும் வரை அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பார் என்று அகிலேஷ் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று லக்னோவில் கூறும்போது, “குற்றச் செயல்களை எங்கள் கட்சி ஆதரிப்பதில்லை. இந்த வழக்கில் யாருக்கும் அநீதி இழைக்கப் படாது” என்றார்.

SCROLL FOR NEXT