2ஜி வழக்கில் தொடர்புடைய எஸ்ஸார் நிறுவன தலைவர் ரவி ரூயா வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை, அந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எஸ்ஸார் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ரவி ரூயா. 2ஜி வழக்கில் இவரை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாபாரம் சம்பந்தமாக ஜூன் 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஐரோப்பாவுக்குச் செல்ல அனுமதி தரும்படி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி கூறியதாவது:
அவரின் விண்ணப்பத்தில் சில இடங்களில் எஸ்ஸார் நிறுவனத் தலைவர் என உள்ளது. சில இடங்களில் ஆலோசகர் என்று உள்ளது. இந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. எந்தெந்த நாடுகளுக்கு அவர் செல்லவிருக்கிறார் என்பது குறித்த தகவல்களும் இல்லை.
முக்கிய வழக்குகளில் தீர்வை எட்ட முடியாத அளவுக்கு இவர் பல மனுக்களைத் தாக்கல் செய்து கொண்டே இருக்கிறார். இதன் மூலம் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது.
இதற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் உத்தர விட்டார்.