இந்தியா

அவசர நிலை காலகட்டம்தான் இந்தியாவின் இருண்ட காலம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிடிஐ

‘‘அவசர நிலை இருந்த காலக்கட்டம்தான், இந்தியாவின் இருண்ட காலம்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, நாட்டில் அவசர நிலையை (எமர்ஜென்சி) பிரகடனப் படுத்தினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இந்த நிலை 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை நீடித்தது. அந்தக் காலக் கட்டத்தில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டன. பத்திரிகைகள் நெருக்கடியை சந்தித்தன. அவசர நிலை அறிவிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

அவசர நிலை காலக் கட்டம்தான் இந்தியாவின் இருண்ட காலம். இந்திய ஜனநாயகத்தை அப்போது காங்கிரஸ் நசுக்கியது. இந்திய வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25 - 26-ம் தேதிகளை யாரும் மறக்க முடியாது. அவசர நிலை என்ற பெயரில் இந்திய நாட்டை சங்கிலியால் கட்டிப் போட்டது காங்கிரஸ். ஆட்சி அதிகாரத்துக்காக ஜனநாயகம் சிறையில் அடைக்கப்பட்டது. பத்திரிகை அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அரசு என்ன விரும்புகிறதோ அந்த செய்திகளை மட்டும் வானொலி ஒலிபரப்பியது. ஜனநாயகத்துக்காக போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வளர்ச்சிக்கு அடிப்படையே சுதந்திரமான ஜனநாயகம்தான். அதன் நெறிமுறைகளை வலுப் படுத்த வேண்டியது அவசியம். ஜனநாயகத்தை வலுப்படுத்த நம்மால் முடிந்ததை செய்வோம். அவசர நிலை பிரகடனப்படுத்தி யதை லட்சக்கணக்கான மக்கள், அரசியல் தலைவர்கள் ஒன்று திரண்டு எதிர்த்தனர். அவசர நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடி ஜனநாயகத்தை நிலைநாட்டியவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஜனநாயகத்தை காப்பாற்ற நாடு முழுவதும் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள் பெரும் இயக்கத்தில் அப்போது பங்கேற்றனர்.

அவசர நிலை காலம் பல பழைய நினைவுகளை கொண்டு வருகிறது. அப்போது வாலிப வயதில் இருந்த நாங்கள் அவசர நிலையை எதிர்த்த காலத் தில் பல பாடங்களை கற்றுக் கொண்டோம். ஒரே லட்சியத்துக் காக, ஜனநாயகத்துக்காக பல்வேறு தலைவர்களுடனும் அமைப்புகளுடனும் பணியாற்ற அவசர நிலை காலம் ஒரு வாய்ப்பாக இருந்தது.

இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT