ஆந்திர மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக தீர்க்க, நதிநீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதே எனது லட்சியம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
விஜயவாடாவில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், இணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மாநில பிரிவினை நடந்த பின்னர், ஆந்திர மாநிலம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. நிரந்தர தலைநகர் இல்லாத நிலையில், ஹைதராபாத்திலேயே இருந்து கொண்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பினும், ஒவ்வொரு பிரச்சினையையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு வருகிறோம்.
ஆந்திர மாநில வளர்ச்சிக்கு 7 அம்ச திட்டத்தை முழுமையாக அமல்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு அவசியம். வரும் 2020 ஆண்டுக்குள் நாட்டின் வளர்ச்சி பெற்ற முதல் 3 மாநிலங்களில் ஆந்திரா இருக்கும். 2029-ம் ஆண்டுக்குள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக நாட்டிலேயே முதல் இடத்தில் ஆந்திர மாநிலம் திகழும். 2018-19-ம் ஆண்டுக்குள் போலாவரம் அணை கட்டும் திட்டம் முழுமையடையும்.
பட்ஜெட்டில் அறிவித்த வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நதிநீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதே லட்சியம். இதன் மூலம் மாநிலத்தில் கூடுதலாக 12 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி அளிக்க முடியும். ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே மாநிலம் முழுவதும் 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது மிளகாய், எண்ணெய், தேங்காய் உற்பத்தியில் ஆந்திர மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.