இந்தியா

காங். தலைவராக ராகுல் செப்டம்பரில் பொறுப்பேற்க வாய்ப்பு

ஜதின் ஆனந்த்

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 84-வது கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவார் எனக் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

'தி இந்து' ஆங்கிலத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த தகவலின்படி, காங்கிரஸ் கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நடைபெறும் எனத் தெரிகிறது. கடந்த 2010-ல் நடைபெற்ற அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் செப்டம்பரில் நடைபெறும் வரை காத்திருக்காமல் ராகுல் காந்தியை உடனடியாக கட்சித் தலைவராக பதவி உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இருப்பினும், ராகுலுக்கு நெருக்கமான தரப்பு 'தி இந்து'விடம் கூறும்போது, "ராகுல் காந்தி செப்டம்பர் வரை காத்திருக்க தயாராக இருக்கிறார். அவர், மோடி அரசாங்கத்தின் விவசாய விரோதப் போக்கு, நில அவசரச் சட்டம் ஆகியன குறித்து இன்னும் அதிகமாக பிரச்சாரம் செய்ய விரும்புகிறார்" என தெரிவித்தது.

விவசாயிகள் குறை கேட்பதற்காக ராகுல் காந்தி அண்மையில் மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் அவர் அடுத்தபடியாக மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்குச் செல்கிறார். ஜூன் இறுதியில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

SCROLL FOR NEXT