“எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு ஏதாவது நடந்தால், காவல் துறைதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக இ.எஸ்.எல். நரசிம்மனை, சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இதை யடுத்து சந்திரபாபு நாயுடுவிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், சீமாந்திரா மாநில முதல்வர் பொறுப்பேற்க உள்ளவருமான சந்திரபாபு நாயுடு, மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனுக்கு கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தில், கொல்லம் கங்கிரெட்டி உள்பட சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கங்கிரெட்டியை சில போலீஸாரே ஹைதராபாத்தில் இருந்து வெளிநாட்டிற்குத் தப்பித்துச் செல்ல உதவி புரிந்ததால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு எனவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த கங்கிரெட்டி?
கடந்த 2003-ம் ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்க திருமலைக்கு அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு சென்றார்.
மலைவழிப் பாதையில் அவர் சென்ற கார் வெடிகுண்டு தாக்கு தலுக்கு உள்ளானது. இதில் நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கொல்லம் கங்கிரெட்டி தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.