இந்தியா

அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பு கலப்பு விவகாரம்: உணவு பாதுகாப்பு ஆணையத்தில் மேகி நூடுல்ஸ் பரிசோதனை - விளம்பரத்தில் நடித்தவர்களுக்கும் பொறுப்பு என அறிவிப்பு

பிடிஐ

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் கலந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய நடிகர், நடிகைகள் மக்களை தவறாக வழி நடத்தி யிருந்தால், அவர்களுக்கும் அதில் பொறுப்பு உண்டு என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மேகி நூடுல்ஸில் மோனோ சோடியம் குளுடாமேட் என்ற ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட 17 மடங்கு அதிகம் கலக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப் பாட்டு அமைப்பு கண்டறிந்தது.

இதையடுத்து அந்நிறுவ னத்தின் மீது வழக்குத் தொடரப் பட்டுள்ளது. மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய நடிகை மாதுரி தீட்ஷித்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நடிகர்கள் மீது வழக்கு

மேலும் மேகி நூடுல்ஸ் விளம்பரம் மூலம் மக்களை தவறாக வழி நடத்தியதாக நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீதும் வழக்கறிஞர் ஒருவர் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இப்போது நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

அமைச்சகம் கடிதம்

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ் வான், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இப்போது இந்த விவகாரத்தை கவனித்து வருகிறது.

இது தொடர்பாக அவர்களுக்கு எங்கள் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. உறுதியான நடவடிக்கை மேற்கொள் ளப்படும். இதுவரை மேகி நூடுல்ஸ் தொடர்பாக நுகர் வோர் விவகாரத்துறைக்கு நுகர் வோர்களிடம் இருந்து எந்த புகார் மனுவும் வரவில்லை” என்றார்.

மத்திய நுகர்வோர் விவகாரத் துறை கூடுதல் செயலாளர் ஜி.குருசந்திரன் இது தொடர்பாக கூறும்போது, “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை பெற்று, பரிசோதனையை முடித்து விட்டது. ஒரு சில அறிக்கைகள் மட்டுமே வர வேண்டியுள்ளது.

எனவே ஒரு சில நாட்களில் முழுமையான அறிக்கை கிடைத்துவிடும். அளவுக்கு அதிக மான ரசாயன உப்பு கலப்பு உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மக்களை தவறாக வழி நடத்தியது கண்டறியப் பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மேகி நூடுல்ஸ் தரப்பிலோ, அதன் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே தரப்பிலோ எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக கேள்வி எழுப்பி அனுப்பப்பட்ட இ-மெயில் களுக்கும் அந்நிறுவனம் பதில் அளிக்கவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT