இந்தியா

சல்மான் கானின் தண்டனையை நிறுத்திவைத்தது மும்பை உயர் நீதிமன்றம்

பிடிஐ

மது போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், மும்பை விசாரணை நீதிமன்றத்திடம் ரூ.30,000 பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் சல்மான் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சல்மான் கானின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், அவர் விடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2002-ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதன் பின்னர், சல்மான் தரப்பில் அதே நாளில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

2 நாட்கள் ஜாமீன் இன்றுடன் முடிவடையும் நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் சல்மான் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையில் சல்மான் கான் சார்பில் அவரது தரப்பில் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி திப்சே, நடிகர் சல்மான் கானின் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT