உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது ரேபரேலி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு நாள் பயணம் சென்றிருந்தார். அப்போது, `என்னுடைய தொகுதியை மத்திய அரசு வஞ்சிக்கிறது' என்று புகார் அளித்துள்ளார்.
தனது தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சோனியா பார்வையிட்டார். பின்னர் தன் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில், `பிரதமர் ஊரக சாலைத் திட்டத்தின் கீழ் இந்த தொகுதிக்கு குறைந்த அளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனது தொகுதியை மத்திய அரசு வஞ்சிப்பது இதன் மூலம் தெரிய வருகிறது' என்றார்.
பின்னர், தப்பிப் பெய்த பருவமழை யில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து உதவியை நாடாமல், தாமாகவே முன் வந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிய உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை சோனியா பாராட்டினார்.
கூட்டம் முடிந்த பிறகு, சமீபத்தில் நடந்த பச்ராவன் ரயில் விபத்தில் உயிரிழந்த 30 பேர்களின் குடும்பங்களை சோனியா சந்தித்தார். அப்போது உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.