நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு குடியரசு தின விழா அணிவகுப்புக்கு வழங்கப்படுவதற்கு நிகரான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலேயே குடியரசு தின விழா அணிவகுப்புக்குதான் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மோடி பதவியேற்பு விழாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நாட்டின் 15-வது பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வெளியே திறந்த வெளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அண்டை நாடுகளின் தலைவர்கள் உள்பட 3000 அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி போலீஸார் கூறியுள்ளது: குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றியுள்ள அலுவலகங்கள் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் பகல் 1 மணிக்கே மூடப்பட்டு, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும்.
இந்திய விமானப்படையினர் வான் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக் கொள் வார்கள். அனைத்து உயரமான கட்டிடங் களிலும் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடப்படும்.
துணை ராணுவப்படையினர், தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், டெல்லி போலீஸ் கமாண்டோக்கள், மோப்ப நாய் குழுவைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் தயார் நிலையில் இருக்கும்.
வாஜ்பாயை பின்பற்றி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு எதிரே உள்ள திறந்த வெளிப்பகுதியில் மோடி பதவியேற்க விரும்புகிறார். அதிக அளவிலான பார்வையாளர்கள் பங்கேற்கவும் இது வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் இதே இடத்தில்தான் பதவியேற்றார்.
பதவியேற்பு விழா ஏற்பாடுகளை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியை பார்வையிட பொதுமக்கள் செல்ல முடியாது.