இந்தியா

ஓராண்டாக சிறுபான்மையினர் மீது தாக்குதல் இல்லை: நஜ்மா

சாஹித் ராஃபிக்

கடந்த ஓர் ஆண்டில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், நாட்டின் எந்த மூலையிலும் கலவரங்கள் நடக்கவில்லை என்றும் மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரசின் செயல்பாடுகளை எடுத்துக் கூற நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் பல நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சராக இருக்கும் நஜ்மா ஹெப்துல்லா ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, "பாஜக தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் காக்கப்படுகின்றனர். கடந்த ஓர் ஆண்டில் எந்த சிறுபான்மையினரும் தாக்கப்படவில்லை.

நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் கலவரங்களும் ஏதும் நடக்கவில்லை. வார்த்தை மோதல்கள் மட்டுமே முரண்பாடாக இருந்தன. அதுவும் தற்போது இல்லை. அனைவரும் அமைதியுடன் வாழ்கின்றனர்" என்றார்.

டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "நான் டெல்லியில் தான் வசிக்கிறேன். அப்படி எதுவும் சம்பவம் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர். தேவையில்லாத குற்றச்சாட்டுகளால் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அத்தகைய நிலை இல்லை" என்றார் நஜ்மா.

SCROLL FOR NEXT