பல கோடி இந்திய மக்களை வறுமை கோட்டிலிருந்து உயர்த்தி, சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை மன்மோகன் சிங் உயர்த்தியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 10 ஆண்டு காலம் இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் இது தொடர்பாக அவருக்கு பிரிவு உபச்சார கடிதம் ஒன்றையும் ஒபாமா எழுதியுள்ளார்.
அதில், "அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த நீங்கள் எடுத்த தைரியமான மற்றும் விரிவான நடவடிக்கைகள் பாராட்டிற்குரியது. இந்தியாவில், பல கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு, அவர்களின் வாக்ழ்கைத் தரத்தை உயர்த்தியுள்ளீர்கள். இந்தியாவின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தவும் பல நடவடிக்கைகள் உங்கள் தலைமையில் எடுக்கப்பட்டது.
நமது இரு நாடுகள் தரப்பிலும் ராணுவ நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளது. இதன்மூலம் நமது மக்கள் பாதுகாப்பாகவும் வளமான நாட்டில் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை அடைந்துள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து போராடியது. உலக அளவில் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் பரவுதலை தடுத்தல் மற்றும் ஆப்கான் போன்ற நாடுகளில் அமைதியை ஏற்படுத்த இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
முக்கியமாக பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எனைத்தும் முற்றிலும் பாராட்டத்தக்கது" என்று ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.