பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் ஜூன் 6-ம் தேதி வங்கதேசம் செல்கிறார்.
இந்தியா வங்கதேசம் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் அவர் விரிவான பேச்சு நடத்த உள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, வங்கதேசம் வருமாறு மோடிக்கு தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் ஹேக் ஹசீனா அழைப்பு விடுத்தி ருந்தார்.
இதன் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். பிறகு கடந்த நவம்பர் மாதம் காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் இருவரும் சந்தித்தனர்.
வங்கதேசத்துடன் 41 ஆண்டு கால எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறைவேறியது.
இந்நிலையில் இரு நாடுகள் இடையே நீண்டநாள் பிரச்சினையான தீஸ்தா நதிநீர் பங்கீடு குறித்து பிரதமர் மோடியின் பயணத்தின்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
மோடி தனது பயணத்தில், வங்கதேச அதிபர் முகமது அப்துல் ஹமீதையும் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக வங்கதேசம் இருந்து வருகிறது. இரு நாடுகளிடையே கடந்த 2012-13ம் ஆண்டில் 534 கோடி டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி 477.6 கோடி டாலராகவும் இறக்குமதி 56.4 கோடி டாலராகவும் இருந்தது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் சென்றி ருந்தார்.