தனிப்பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என குஜராத் மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி புதன்கிழமை ராஜினாமா செய்தார். அவருக்கு வழியனுப்பு விழா நடத்தும் விதத்தில், குஜராத் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் மோடிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது, குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சங்கர் சிங் வகேலா மோடிக்கு புகழ்மாலை சூட்டினார்.
அவர் பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக லால் கிருஷ்ண அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார். கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக அடல் பிஹாரி வாஜ்பாய் இவ்விஷயத்தில் சமரசம் செய்ய வேண்டியிருந்தது. தற்போது, பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இது நன்மைக்கே. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்.
கோத்ரா சம்பவம்
நாட்டுக்கு இரு பிரதமர்களை அளித்ததில் கோத்ரா வன்முறைகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. 1969-ம் ஆண்டு கோத்ராவில் கலவரம் வெடித்த போது, மொரார்ஜி தேசாய் துணை ஆட்சியராக இருந்தார். அக்கலவரத்தைத் தடுக்கத் தவறியதாக அவர் மீது பழி சுமத்தப்பட்டது. அதற்குப் பின் அந்த வேலையைத் துறந்த அவர், அரசியலில் சேர்ந்து பின்னாளில் பிரதமரானார். நீங்கள் (மோடி) கோத்ராவிலும் வடோதராவிலும் பிரச்சாரகராக இருந்தீர்கள். 2002- குஜராத் வன்முறை விஷயத்துக்குள் நுழைய நான் விரும்பவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிறகு, வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய நெருக்கடி உங்களுக்கு வரும்.
கருப்புப் பணம்
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு பாபா ராம்தேவ் தலைமையில் குழு அமைக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் இடையே நிலுவையிலிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
மேலும், நர்மதா அணை மதகு விவகாரம், காஸ் விலை, மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி உள்ளிட்ட மாநிலப் பிரச்சினைகள் தாமதமாகிக் கொண்டு இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வகேலா பேசினார்.
காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். தீவிர உறுப்பினராகவும், பாஜகவிலும் வகேலா இருந்தது குறிப்பிடத்தக்கது.