பிஹாரில் வெற்றிலை வியாபாரியின் மகனான 8 வயது சிறுவன், இடஒதுக்கீட்டுக்கு எதிரான தனது பேச்சால் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை பிரமிக்க வைத்தான்.
பிஹாரில் பெரும்பாலும் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபடும் சவுராஸியா சமூகத்தினரின் மாநாடு பாட்னாவில் உள்ள எஸ்.கே. மெமோரியல் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று பேசவிருந்தார்.
அவர் வருவதற்கு முன்பு குமார் ராஜ் சவுராஸியா என்ற 8-வயது சிறுவன், “என்னை பேச அனுமதியுங்கள்” என்ற பதாகையை கையில் ஏந்தி அங்கு நின்றிருந்தான். என்றாலும் அதை யாரும் பொருட்டாக கருதவில்லை. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க நிதிஷ்குமார் வந்தபோது, பாதுகாப்பு அதிகாரிகள் தடுப்பதற்கு முன்பே, கூட்டத்தினரை சமாளித்து சிறுவன் குமார் ராஜ் மேடையில் ஏறிவிட்டான். யார் கூறியும் அவன் கீழே இறங்குவதாக இல்லை.
ஒரு கையில் பதாகை, மற்றொரு கையில் மாலையுடன் (முதல்வருக்கு அணிவிக்க) நின்றிருந்த குமார் ராஜை, நிதிஷ்குமார் சிறிது நேரத்தில் கவனித்து, அச்சிறுவனை பேச அனுமதிக்குமாறு கூறினார்.
அரா என்ற இடத்தைச் சேர்ந்த சைலேந்திர குமார் சவுராஸியா என்ற வெற்றிலை வியாபாரியின் மகனான குமார் ராஜ், பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல்வரையும் கூட்டத்தினரையும் பிரம்மிக்க வைத்தான்.
“எங்கள் சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி. ஆனால் இத்தகைய இட ஒதுக்கீடு தேவைப்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நம்மால் ஏன் அத்தகைய நிலையை உருவாக்க முடியாது? குழந்தைகளுக்கு வெவ்வேறு வகை கல்வி வழங்கப்படுவதே சமூகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு அடிப்படை காரணம். ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளியிலும் பணக்காரர்களின் குழந்தைகள், வசதிகளுடன் கூடிய தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.
நான் பிரதமராக ஆனால் அனைத்து தனியார் பள்ளிகளை மூடிவிட்டு அனைவருக்கு ஒரே வகையான கல்வி கொடுப்பேன். சவுராஸியா சமூகத்தினரை நான் கேட்கிறேன். இடஒதுக்கீட்டால் உங்கள் பிள்ளைகள் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என நீங்கள் எண்ணுகிறீர்களா? இடஒதுக்கீடு இல்லாமல் நம்மால் ஏன் முன்னேற முடியாது?” என்ற குமார் ராஜின் பேச்சால் அரங்கில் அமைதி நிலவியது. அச்சிறுவன் 10 நிமிடங்களுக்கு மேலாக பேசி முடித்த பிறகு அரங்கில் பலத்த கரவொலி எழுந்தது.
குமார் ராஜை அழைத்து பாராட்டிய முதல்வர் அவனுக்கு வெற்றிலை மாலை அணிவித்தார். அப்போது நிதிஷ்குமார் கூறும்போது, “தேனீர் வியாபாரியின் மகன் (நரேந்திர மோடி) பிரதமர் ஆகும்போது, வெற்றிலை வியாபாரியின் மகன் ஏன் பிரதமர் ஆக முடியாது? எப்போதும் பெரிதாகவே சிந்திக்க வேண்டும்” என்று அச்சிறுவனை வாழ்த்தினார்.
அச்சிறுவனுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவி செய்வதாக உறுதியளித்த நிதிஷ்குமார், அச்சிறுவனின் முகவரியை அறிந்து கொள்ளுமாறு உதவியாளரிடம் கூறினார்.