பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் காஷ்மீர் பற்றி கூறிய கருத்திற்கு முதல்வர் ஓமர் அப்துள்ளா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜிதேந்திரா சிங் கூறியிருப்பதாவது, “காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ன் நன்மைகள், தீமைகள் குறித்து விவாதம் நடத்தி இது குறித்து திருப்தி இல்லாதவர்களை திருப்தி செய்வதே அவரது (நரேந்திர மோடியின்) நோக்கம்” என்று கூறியிருந்தார்.
இந்தச் செய்திக்கு உடனேயே ட்விட்டரில் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலடி கொடுத்தார்:
”ஆகவே, பிரதமர் அலுவலகத்தின் புதிய இணை அமைச்சர் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான நடைமுறை/விவாதங்கள் துவங்கிவிட்டது என்கிறார். இது ஒரு அதிவிரைவுத் துவக்கம்தான், ஆனால் யார் பேசினார் என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.
எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், மோடி அரசு தொலைதூர நினைவான பிறகு ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது, அல்லது அரசியல் சட்டப்பிரிவு 370 நீடித்திருக்கும்.
இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இருக்கும் ஒரே அரசியல் சட்டத் தொடர்பு அரசியல் சட்டப்பிரிவு 370 மட்டுமே. எனவே அதனை திரும்பப் பெறுவது என்ற பேச்சு அறியாமையினால் விளைந்தது மட்டுமல்ல பொறுப்பற்ற பேச்சும் ஆகும்” என்று ட்வீட் செய்துள்ளார் ஓமர் அப்துல்லா.