தங்க டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் (2014-15) தங்க டெபாசிட் திட்டம் ஒன்றை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இதற்கான வழிகாட்டு முறைகள் நேற்று வெளியாயின. இதில் வங்கிகளில் வைக்கப்படும் தங்க நகைகள் மூலமாக கிடைக்கும் வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் வங்கிகளுக்கு ஊக்க பரிசுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்ய முடி யும். இதற்கு கிடைக்கும் வட்டித் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். அத்துடன் மூலதன ஆதாய வரி விலக்கும் அளிக்கப்படும்.
நாட்டிலுள்ள மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் சுமார் 20 ஆயிரம் டன் தங்கம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.60 லட்சம் கோடியாகும். இதில் பெருமளவிலான தங்கம் கோயில்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் வசம் உள்ளன. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறியில் எத்தகைய நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள தங்கத்தை இத்திட்டத் தில் டெபாசிட் செய்யலாம் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
தங்க டெபாசிட் திட்டத்தில் சேர விரும்புவோர் தங்கள் நகைகளுக்கு பிஐஎஸ் தரச் சான்று மையங்களில் சான்று பெற்று வங்கிகளில் தங்க டெபாசிட் திட்ட கணக்கில் சேர்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு காலம் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டம் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை ஜூன் 2-ம் தேதிக்குள் அனுப்பலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டமானது முதல் கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தனி நபர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் வட்டியைப் பெறலாம். தங்க நகை வர்த்தகர்கள் இதற்கான கணக்கு மூலம் வட்டியை பெறலாம். இந்தத் திட்டத்தில் தங்க நகைகளை டெபாசிட் செய்பவர்களுக்கு கணக்கு தொடங்கிய 30 நாள் அல்லது 60 நாள்களில் வட்டி வழங்கப்படும்.
100 கிராம் தங்கம் டெபாசிட் செய்தால் ஒரு கிராம் வட்டி எனில் முதிர்வு காலத்தில் அவருக்கு 101 கிராம் தங்கம் அளிக்கப்படும். இந்தியாவில் அசோக சக்கர சின்னம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை உருவாக்கும் முயற்சியையும் அரசு எடுத்து வருகிறது.