இந்தியா

ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அளித்துள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம்

பிடிஐ

கடந்த ஓராண்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அளித்துள்ளோம். 60 ஆண்டுகளாக நாட்டை கொள்ளையடித்தவர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவை ஒட்டி உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் நாக்லா சந்த்ரபான் கிராமத்தில் திங்களன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி பங்கேற்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோல 200 பொதுகூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மோடி சுமார் ஒருமணி நேரம் வரை பேசினார். அதன் சுருக்கம்:

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை நான் அரசியலாக்க விரும்பவில்லை, மாறாக சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்த பிறகும் நம் விவசாயிகள் ஏன் தொடர்ந்து பிரச்சினைகளிலேயே தத்தளிக்கிறார்கள். இதற்கு தீர்வு காண விரும்புகிறேன். நான் இந்நாட்டின் பிரதம அமைச்சர் அல்ல, நான் பிரதம காவலன். நாட்டை கொள்ளையடிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன். தேசத்தின் வளத்தை கொள்ளையடிக்க நினைக்கும் எந்த “கை”யையும் அனுமதிக்கமாட்டேன்.

அரசு மாறாவிட்டால் மாற்றம் வர முடியுமா? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிகாரத்தில் இருந்தபோது நாடு சுபிட்சமாக இருந்ததா?

கடந்த ஓர் ஆண்டில் ஊழல் ஏதாவது நடந்திருக்கிறதா? அரசியல்வாதிகளின் வாரிசுகள் பற்றிய ஊழல் செய்தி ஏதாவது வந்துள்ளதா? அரசியல் தலைவர்களின் மகன் அல்லது மருமகன் ஊழல் செய்ததாக புகார் வந்துள்ளதா? அவர்களின் பிரச்சினை என்னவென்றால் மக்களுக்கு நல்ல நாள் பிறந்துள்ளது அவர்களுக்கு மோசமான நாளாக மாறியுள்ளதே.

கங்கை, யமுனை நதிகள் என் தாய் போன்றவர்கள். இந்த நதிகளை சுத்தம் செய்வோம், இதற்கு மக்களின் உதவி தேவை. 2014-ல் தேர்தல் வரவில்லை என்றால், இந்த ஓராண்டில் இந்த நாடு மேலும் எவ்வளவு மூழ்கியிருக்கும்?

எங்கள் ஆட்சியின் 365 நாட்கள் பற்றி மக்களுக்கு நாம் அறிவிக்க வேண்டும் என்று கட்சியினரிடத்தில் நான் அறிவுறுத்தியுள்ளேன்.

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை சுரண்டியவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் கடந்த ஓராண்டு மோசமாக அமைந்தது. மக்களுக்கு ‘நல்ல தினம்’ மக்கள் அனைவருக்கும் வந்து சேர்ந்துள்ளது. ஆனால் நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு ‘மோசமான தினம் வந்துள்ளது.

மகாத்மா காந்திஜி, லோகியா ஜி, தீன்தயாள் ஜி ஆகிய மூன்று பேருடைய எண்ணங்கள்தான் எங்களை செதுக்கியது. கடந்த ஆட்சியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம்தான் அரசு இயங்கியது. இப்போது அதுபோன்ற நிலை இல்லை. விடுப்பு எடுத்துக் கொள்வதில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். பிரதமராக நான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறேன்.

இந்தியாவில் சட்டங்கள் முட்புதராக வளர்ந்து கிடக்கின்றன. எதிர்காலத்தில் 1,300 சட்டங்கள் நீக்கப்படும்.

மகாபாரதத்தில் அபிமன்யூ 8 வியூகங்களை உடைத்தார். இப்போது நாட்டின் நூற்றுக்கணக்கான மோசமான வியூகங்கள் உள்ளன. மக்கள் ஆசியுடன் அவை உடைக்கப்படுகின்றன. நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நடுவில் சுரண்டுபவர்களும், ஊழல் செய்பவர்களும் அனுமதிக்கப்படுவதில்லை என்று மோடி பேசினார்.

SCROLL FOR NEXT