இந்தியா

பூஜ்ஜியங்கள் பூஜ்ஜியத்துக்கு அப்பால் பார்ப்பதில்லை: ராகுலுக்கு வெங்கையா நாயுடு பதிலடி

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சிக்கு தான் 10க்கு 0 மார்க்தான் அளிப்பேன் என்று ராகுல் காந்தி கூறியதற்கு வெங்கைய நாயுடு பதிலடி கொடுத்தார்.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கைய நாயுடு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

"பூஜ்ஜியங்கள் எப்போதும் பூஜ்ஜியத்துக்கு அப்பால் பார்ப்பதில்லை. உலகமே பிரதமர் மோடியை மிகப்பெரிய தலைவராகவும், செயல் வீரராகவும் புகழ்ந்து வருகிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. ஆனால் நீங்கள் பூஜ்ஜியம் என்பீர்கள். பூஜ்ஜியங்கள் எப்போதும் பூஜ்ஜியத்தைத் தாண்டி பார்ப்பதில்லை. ஸீரோக்களுக்கு ஹீரோக்களை அங்கீகரிக்கும் திறமை இல்லை.

ராகுல் அரசியலில் 11 ஆண்டுகளாக இருந்து வருகிறார். என்ன நடந்து விட்டது. காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களை இழந்துள்ளது. ஒரு எதிர்கட்சியாகக் கூட காங்கிரஸ் அங்கீகாரம் பெறவில்லை. அவர்களது பெரும்தோல்விகளை ஆக்ரோஷ வார்த்தைகளால் பதிலீடு செய்ய முயற்சி செய்கின்றனர். அதாவது மலிவான கருத்துகளை அரசின் மீது ஏவிவருகின்றனர்” என்றார்.

காங்கிரஸ் தலைமை எதிர்கட்சிகளால் நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டது குறித்து வெங்கைய நாயுடு கூறும் போது, “நல்ல ஆலோசனைகள் நல்ல நோக்கத்துடன் வழங்கப்பட்டால் நான் மாற்றங்களுக்கு வெளிப்படையாகவே இருக்கிறேன். இதில் நான் 9 திருத்தங்கள் செய்துள்ளேன். இதுதவிர சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மாற்றாத எந்த ஒரு அர்த்தமுள்ள ஆலோசனைகளும் வரவேற்கப்படும்.

நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்னவெனில், மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளனர். நிறைய எதிர்பார்க்கின்றனர். மோடி மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை உள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். எனவே ஒவ்வொரு துறையிலும் மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்படுவோம்” என்றார்.

SCROLL FOR NEXT