இந்தியா

தலைமைச் செயலாளர் நியமன விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் அர்விந்த் கேஜ்ரிவால் புகார்

பிடிஐ

தலைமைச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் புகார் மனு அளித்தார்.

டெல்லியில் தலைமைச் செயலாளராக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சகுந்தலா டோலே காம்ளின் என்பவரை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நியமனம் செய்துள்ளார். இதனை ஆளும் ஆம் ஆத்மி அரசு ஏற்க மறுத்துள்ளது.

இந்த விவகாரத்தால் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.

இதனிடையே டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் நேற்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது, துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார், முதல்வரின் ஒப்புதல் இன்றி தலைமைச் செயலாளரை தன்னிச்சையாக நியமிக்கிறார் என்று கேஜ்ரிவால் புகார் தெரிவித்தார்.

இதன்பின்னர் நிருபர்களிடம் சிசோடியா பேசியபோது, ‘‘டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதுபோல் துணைநிலை ஆளுநர் செயல்படு கிறார், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கு அவர் மதிப்பளிக்கவில்லை. ஆளுநரின் செயல்பாட்டால் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்துள் ளோம்’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே டெல்லி அரசின் அனைத்துத் துறை செயலாளர்களின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடத்தப்படுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் டெல்லியின் புதிய முதன்மைச் செயலாளராக அர்விந்த் ராய் என்பவரை ஆம் ஆத்மி அரசு நியமித்துள்ளது. இந்த நியமனத்தை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நிராகரித் துள்ளார்.

ராஜ்நாத் சிங்-நஜீப் ஜங் சந்திப்பு

இப் பிரச்சினை குறித்து நஜீப் ஜங் கூறியபோது, ஆம் ஆத்மி அரசு டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோருகிறது, அதுதான் பிரச்சினைக்கு மூலக் காரணம், தற்போதைய நிலையில் டெல்லி அரசியல் சாசன அமைப்பு சீர்குலைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று அவர் சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறிய போது, துணைநிலை ஆளுநரும் முதல்வரும் சட்டவிதி களுக்கு உள்பட்டு செயல் பட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருப்பதாகத் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் சந்தித்து பேசினார்.

SCROLL FOR NEXT