இந்தியா

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு மசோதாவை கண்டித்து வேலைநிறுத்தத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

பிடிஐ

மத்திய அரசின் புதிய சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பு மசோதாவை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக, தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் பஸ் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

எனினும், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பில்லை. பெரும்பாலான அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 24 மணி நேர நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, எல்பிஎப் மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. மாநிலங்களில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களும், தனியார் போக்கு வரத்து நிறுவன உரிமையாளர் களும், ஆட்டோ ரிக் ஷாக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

இந்தப் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்பட வில்லை.

கேரளாவிலும் பஸ் போக்கு வரத்து முடங்கியது. குறிப்பாக, பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பி உள்ள நிலையில், பணியிடங் களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

கர்நாடகாவில் பாதிப்பு

இந்தப் போராட்டத்துக்கு கர்நாடக அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து தொழிலா ளர்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிற்சங்கங்கள் முழுமையாக ஆதரவு தெரிவித்தன.

இதனால் அனைத்து மாவட்டங் களிலும் பஸ்கள், ஆட்டோக்கள், கால்டாக்ஸிகள், லாரிகள் இயங்க வில்லை.இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

சில இடங்களில் இயக்கப் பட்ட அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு வந்த பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப் பட்டன. இதனால் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான‌ பயணிகள் கடும் அவதிக்கு உள்ளா கினர்.

இதற்கிடையே, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, “மாநில அரசு போக்குவரத்து நிறுவனங்களின் உரிமைகளில் இந்த மசோதா தலையிடாது. ஏதாவது குறைகள் இருந்தாலும் விவாதித்து சரி செய்து கொள்ளலாம், போராட்டத்தை கைவிடுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், கட்கரி விடுத்த அழைப்பை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

SCROLL FOR NEXT