இந்தியா

மின்வெட்டை சமாளிக்க தெருக்களில் எல்.ஈ.டி பல்புகள்: உ.பி. முதல்வர் உத்தரவு

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேசத்தில் மின்வெட்டை சமாளிக்க லக்னோ மற்றும் அலிகர் நகரங்களின் பொது இடங்கள் மற்றும் தெருக்களில் எல்.ஈ.டி பல்புகளை பொருத்த, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல் அமைச்சர் இல்லத்தில், உத்தரப் பிரதேச மின்சார சேவை மையத்தின் நிர்வாக அதிகாரியுடனான சந்திப்புக்கு பின் அகிலேஷ் கூறுகையில், "மின்வெட்டை சமாளிக்க வேண்டி அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இதன் முதல் கட்டமாக இருநகரங்களின் பொது இடங்களில் உள்ள தெருவிளக்குகளின் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்.ஈ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும். இதை படிப்படியாக அரசின் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளிலும் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.

இதற்காக, மலிவு விலையிலான எல்.ஈ.டி பல்புகள் உபியின் சந்தைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யும்படியும் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அகிலேஷ்.

இந்த எல்.ஈ.டி பல்புகளை முறையாகப் பயன்படுத்துவதால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 40 சதவிகித மின்சாரம் சேமிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட 500 மெகாவாட் யூனிட் திறன் கொண்ட தெர்மல் மின் திட்டம், தனது மின் உற்பத்தியை துவக்கி உள்ளது. இத்துடன் மற்றொரு 500 மெகாவாட் யூனிட்டுக்கான மின் உற்பத்தியையும் இன்னும் சில மாதங்களில் துவக்க உள்ளது.

அகிலேஷ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் வரும் 2016 ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில் 20 மணி நேரம் மற்றும் நகர்ப்புறங்களில் 22 மணி நேரத்துக்கு தடையில்லா மின்சாரம் அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மின்சாரத் திருட்டு அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT