கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா அல்லது இத்துடன் இந்த வழக்கு முற்றுப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா ‘தி இந்து'வுக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்பார்த்தீர்களா?
முற்றிலுமாக எதிர்பார்க்க வில்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையின் இந்த மேல்முறையீட்டை விசாரிக்க 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கிறார். இதற்கு முன்பு எத்தனை வழக்குகளில் இத்தகைய கால அவகாசம் வழங்கப்பட்டிருக் கிறது? ஒரு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதைவிட, இயற்கையான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் தானே சிறந்ததாக இருக்க முடியும்?
மேல் முறையீட்டில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் 10 நாட்கள் வரை வாதிட்டுள்ளனர். அதனை அப்போதைய அரசு வழக்கறிஞர் ஆட்சேபித்தாரா தெரியவில்லை. ஆனால் என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தபோது எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதிட வேண்டும். அதுவும் ஒரு நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விடப்பட்டது. அரசு வழக்கறிஞருக்கு வாதிட அனுமதி அளிக்காமல் ஒருதலைபட்சமாக விசாரணையை அனுமதித்தது ஏன்? 18 ஆண்டுகள் இழுத்தடித்த ஒரு வழக்குக்கு, கூடுதலாக 6 மாதங்கள் வழங்குவது குற்ற மில்லையே?
இவ்வளவு சிக்கல் நிறைந்த வழக்கில், ஒரே நாளில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய நீங்கள் சம்மதித்தது ஏன்?
ஜெயலலிதாவின் வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான போது நான் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவிதமான அச்சுறுத்தலுக்கு ஆளானேன். பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் அப்போது ராஜினாமா செய்தேன்.இந்த வழக்கால் நான் சந்தித்த சோதனைகளைப் பற்றி எனது சுயசரிதையில் ஓர் அத்தியாயமே எழுதி இருக்கிறேன். ஏப்ரல் 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் பவானிசிங்கை நீக்கியபோது நான் எனது சொந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். கர்நாடக அரசுக்கு ஒரே ஒருநாள் கால அவகாசம் வழங்கி எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது என்பதால் கர்நாடக அரசு என்னை அணுகியது.
உங்கள் ஒருவருக்கு மட்டும் தான் இந்த வழக்கின் அனைத்து விஷயங்களும் தெரியும். உங்களால் மட்டும்தான் ஒரே நாளில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய முடியும். எனவே நீங்கள் மீண்டும் அரசு வழக்கறிஞ ராக பொறுப்பேற்க வேண்டும் என கேட்டார்கள். அரசாங்கமும் நீதிமன்றமும் எனது உதவியை எதிர்ப்பார்க்கும் நிலையில் எனது அகங்காரத்தை காட்ட முடியாது. எனவே வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தேன்''என்றார்.