ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு 900 பக்கங்களுக்கு மேல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. காலை 11 மணிக்கு மேல் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால் பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி ஒரு கி.மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்தது இரவு 9 மணி வரை 144 தடை அமலில் இருக்கும்.
கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்துக்கு மொத்தம் 5 வாயில்கள் உள்ளன. 5 வாயில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு வாயில் 5 வழியாக நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறுவதால், ஒரு சில சிறப்பு விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே அவர்களும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.