இந்தியா

மே 20-ல் புதிய எம்.பி.க்கள் கூட்டம்: பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் நாள் மே 20-க்குப் பிறகு முடிவு செய்யப்படும் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் 12 பேர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு காரணமான நரேந்திர மோடிக்கு ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். அத்வானியும், மோடியை கட்டித் தழுவி பாராட்டினார்.

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ‘பாஜகவின் எம்பிக்கள் கூட்டம் மே 20-ல் நடக்க உள்ளது. அதில் மோடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேநாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும். இதன் பிறகு மோடியின் பதவி ஏற்பு விழா தேதி குறித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

பாஜகவின் வெற்றிக்காக தளராது உழைத்த மோடியையும் பாஜக ஆட்சியை உருவாக்க காரணமான அதன் தொண்டர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் அனைவரையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சமூகநல அமைப்புகள் என்பது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஐ குறிப்பதாகக் கருதப்படுகிறது. சுயமரியாதை கொண்ட உறுதியான நாட்டை உருவாக்க இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதவியேற்பு தேதி மாற்றம் ஏன்?

மே 21-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய வட்டாரம் கூறுகையில், ‘‘மே 21-ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் என்பதால் அரசியல் நாகரிகம் கருதி அந்த தேதி கைவிடப்பட்டது’’ என்றனர்.

SCROLL FOR NEXT