இந்தியா

நூடுல்ஸில் அதிக ரசாயன உப்பு: நெஸ்லே நிறுவனம், அமிதாப், பிரீத்தி ஜிந்தா, மாதுரி மீது வழக்கு

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச அரசின் வழிகாட்டுதலின்படி, நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா உள்ளிட்ட 5 நிறுவனங்கள் மீது அம்மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தவிர நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் மீது வழக்கறிஞர் ஒருவர் பாரபங்கி நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார். அதில் ‘‘பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளின் விளம்பரத்தில் தோன்றியதுடன், அது உடலுக்கு நல்லது என்று கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். மேலும் பணத்துக்காக இந்தியாவில் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களின் உடல் நலனை கெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்’’ என்று அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஹரோலியில் உள்ள நெஸ்லே தொழிற்சாலை, டெல்லியில் உள்ள நெஸ்டில் இந்தியா லிமிடெட், பாரபங்கியில் உள்ள ஈஸி டே அங்காடி மற்றும் டெல்லியில் உள்ள அதன் தலைமை நிறுவனங் கள், அதன் இரு மேலாளர்கள் மீது உத்தரப் பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நெஸ்லே தயாரிக்கும் அந்த நூடுல்ஸ் பாக்கெட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மோனோசோடியம் குளூடாமேட் என்ற ரசாயன உப்பு அதிகம் கலக்கப்பட்டுள்ளது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வை அடுத்து அந்நிறுவன நூடுல்ஸை தடை செய்ய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன. இதனிடையே நூடுல்ஸில் ரசாயன உப்பு கலப்பு குற்றச்சாட்டு தொடர்பாக அந்த நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசு ஆலோசனை

இந்த விவகாரத்தை தீவிரமாக கவனிக்கும்படி மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் தேசிய நுகர் வோர் ஆணையம் இதில் தலை யிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நூடுல்ஸில் மோனோசோடியம் குளூடாமேட் ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட 17 மடங்கு அதிகம் கலக்கப் பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT