ராஜஸ்தான் மாநிலத்தில் அட்சய திருதியை நாளன்று குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஒரு சமூகத்தில் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதையும் தாண்டி குழந்தை திருமணம் நடத்தி வைக்க முயற்சித்ததாக 6 பேர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் இருவர் குழந்தைகளின் பெற்றோர் ஆவர்.
ஹிந்தோலி பகுதியில் மாலி சமூகத்தினர் சார்பில் பெரிய அளவில் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருமணத்துக்கு தயாராக இருந்த 28 ஜோடிகளில் இரு ஜோடிகள் திருமண வயதை எட்டாதவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஜோடிகளின் பெற்றோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகம் நடைபெறும் பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸார் கண்காணிப்பு மையங்களை அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.