இந்தியா

ஒபாமா வருகை மீதான செலவுகள் குறித்த ஆர்.டி.ஐ. மனு நிராகரிப்பு

பிடிஐ

ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்த போது மத்திய அரசு செய்த செலவுகள் குறித்த விவரங்களைக் கேட்ட தகவலுரிமை மனுவை மத்திய வெளியுறவுத்துறை நிராகரித்தது.

இப்படிப்பட்ட தகவல்களை அளிப்பது அயல்நாட்டு உறவுகளை பாதிக்கும் என்ற அடிப்படையில் நிராகரித்ததாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு இந்த விவரங்களை கேட்டு தகவலுரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “ஒவ்வொரு அயல்நாட்டுத் தலைவர்களின் வருகையும் தனிச்சிறப்பானது என்று கூறுவதில் தவறில்லை என்றே கருதுகிறோம். எனவே இவர்கள் வருகையின் போது அரசு செலவிட்ட தொகையின் விபரங்களை அளிப்பது என்பது அந்த நாடுகளுடனான உறவின் மீது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

எனவே ரகசியக் காப்பு விதிமுறைகளின் படி இத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற இயலாது” என்று கூறியுள்ளது.

கல்காலி தனது மனுவில், “அரசு தானாகவே முன் வந்து இத்தகைய செலவினங்கள் குறித்த தகவலை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் அது மக்கள் பணம்” என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT