இந்தியா

மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி மக்களை சென்றடையவில்லை: மம்தா அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி யுள்ளது. ஆனால் இதன் பயன்கள் மக்களை சென்றடையவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், “மேற்கு வங்க அரசுக்கு கோடிக்கணக்கில் நாங்கள் நிதி வழங்கியுள்ளோம். இந்தப் பணம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடையது அல்ல. உங்கள் பணம். ஆனால் இது உங்களுக்கு வந்து சேரவில்லை” என்றார்.

“கடனுக்கான வட்டி என்ற பெயரில் மாநில நிதியிலிருந்து ஒரு பெரும் தொகையை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்.

“2011-ம் ஆண்டில் இருந்து சுமார் ரூ. 86 ஆயிரம் கோடி நிதியை மத் திய அரசு பறித்துக்கொள்கிறது’’ என அம்மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா திங்கள்கிழமை குற்றம் சாட்டி யிருந்தார்.

இந்நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகை யில், “உலகம் முழுவதும் தோல்வி கண்டுவரும் ஒரு கம்யூனிச அரசை மேற்கு வங்க மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றினர். மக்களுக்காகப் போராடும், ஏழைகளுக்காகப் பாடுபடும் ஒரு அரசுக்காக வாக்களித்தனர். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் எதற்கு எதிராகப் போரிட்டதோ, அதையேதான் அக்கட்சியின் அரசு செய்துகொண்டிருக்கிறது

மாநிலத்தில் சாலைகள் படு மோசமாக உள்ளன. 2 நிமிடத்தில் கடக்கவேண்டிய தூரத்தை 15 20 நிமிடங்களில் கடக்கவேண்டியுள்ளது. இத்தகைய சாலையில்தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் பயணம் செய்ய வேண்டியுள்ளது” என்றார் ராகுல்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகள் பற்றி ராகுல் கூறுகையில், “உணவுப் பாதுகாப்பு திட்டம், நூறு நாள் வேலை திட்டம், தகவல் உரிமைச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகாரம் பெறச் செய்வதன் மூலம் நாட்டை வல்லரசாக்க காங்கிரஸ் விரும்புகிறது.

மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க விரும்பினோம். ஆனால் எதிர்க் கட்சிகள் இதற்கு எங்களை அனு மதிக்கவில்லை.

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இப்பகுதி மக்களின் முன் னேற்றத்துக்கு காங்கிரஸ் பாடுபடும்” என்றார்.

SCROLL FOR NEXT