பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இந்த வாரம் டெல்லிக்கு வரவுள்ள நிலையில், அந்த நாட்டிடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்த மாதத்தில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா மாநிலம் பனாஜியில் நேற்று பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு வரும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இதுதொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து மட்டுமே ஆலோசனை நடத்துவார்.
இதுதொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக, இந்திய மற்றும் பிரான்ஸ் அரசுகள் சார்பில் தனித்தனி குழுக்குள் அமைக்கப்படும். இக்குழு இந்த மாதத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கும். இதில் அரசு நேரடியாக ஈடுபடாது. இந்தப் பேச்சுவார்த்தை முடிந்தவரை விரைவாக முடித்துக்கொள்ளப்படும்.
இதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கொள்கை (டிபிபி) தயாரிக்கப்படும். ஏற்றுமதி, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம், முகவான்மை நிறுவனங்களுக்கான விதிமுறை உள்ளிட்டவை இந்தக் கொள்கையில் இடம்பெறும்.
இந்த டிபிபி கொள்கையை இந்தக் குழு ஆய்வு செய்து 45 நாட்களில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். எனவே, இந்த மாதமும், அடுத்த மாதமும் இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஈவஸ் லு த்ரியன் இன்று இந்தியாவுக்கு வருகிறார். இந்தப் பயணத்தின்போது, மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை நாளை சந்தித்துப் பேசுகிறார். இந்தப் பயணத்தின்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த மாதம் பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதில் இருந்து வந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதன்மூலம் 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
‘என் வீட்டை சோதனையிட உத்தரவிட்டது வியப்பு’
கோவா முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்செகோ தலைமறைவாக உள்ள நிலை யில், அது தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கரின் டெல்லி வீட்டை சோதனையிட கோவா நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து பாரிக்கர் கூறும் போது, “நீதிமன்ற உத்தரவு வியப் பாக இருந்தது. எனினும், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்ட தால் அதுகுறித்து மேலும் கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.
பச்செகோ நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமா என்று கேட்டதற்கு, “அறிவுள்ள எந்த மனிதரும் சட்டப்படி நடந்து கொள்வார்கள்” என்றார்.
2006 ம் ஆண்டு மின்வாரிய பொறியாளரை பிரான்சிஸ்கோ மிக்கி பச்செகோ தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.