இந்தியா

பிஹார் நிலநடுக்க பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

பிடிஐ

பிஹார் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அங்கு 17 பேர் பலியாயினர். அதில் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் நேற்று உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுக்க மொத்தம் 82 பேர் நிலநடுக்கத்தால் காயமடைந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாட்னா மற்றும் கிழக்கு சம்ப்ரன் ஆகிய மாவட்டங்கள்தான் இந்த நிலநடுக்கத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தலா மூன்று பேர் வீதம் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று பேரிடர் மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:

இந்த நிலநடுக்கம் நமக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. எனவே, இனி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கட்டிடங்களைக் கட்டுங்கள்.

நிலநடுக்கத்தால் யாரும் உயிரிழப்பதில்லை. மாறாக, கட்டிடங்கள் இடிந்து விழுந்துதான் பலியாகிறார்கள். மாநிலத்தில் பல இடங்களில் பல மாடிக் கட்டிடங்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து நான் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளேன். ஆனால் யாருமே கேட்பதாக இல்லை.

பாட்னாவில் கட்டிடங்கள் இடிந்து விழவில்லை என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம். குஜராத் பூஜ் பகுதியில் ஏற்பட்டது போன்ற 6.8 ரிக்டர் அளவிலான‌ நிலநடுக்கம் ஏற்பட்டால் என்னவாகும்?

நாம் அனைவரும் இறக்கப் போவது உறுதி. ஆனால் கட்டிடம் இழந்து விழுந்து நாம் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT